கிரிக்கெட் சூதாட்ட சதிக்குற்றச்சாட்டின் பேரில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் உப தலைவர் மஹேல ஜயவர்த்தன மற்றும் திலான் சமரவீர ஆகியோர் மீது ஆட்டத்தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண ஆட்டத்தின் போது இலங்கையின் தோல்விக்குக் காரணம் மஹேல மற்றும் திலான் சமரவீர ஆகியோர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமை தான் என்று அரச தொலைக்காட்சியான சுயாதீன தொலைக்காட்சி குற்றம் சாட்டியது,
அதனையடுத்து பிரஸ்தாப ஆட்டத்தில் இலங்கை அணி தோற்கும் என்று கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவர் பெருந்தொகைப் பணத்தை பந்தயமாக வைத்து சூதாடிய சம்பவம் குறித்தும் செய்திகள் வெளிவந்துள்ளன.
அவ்வாறான நிலையில் உண்மையிலேயே அவர்கள் இருவரும் ஆட்டநிர்ணய சதியில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதை விசாரிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கவனம் திரும்பியுள்ளது.
அதன் காரணமாக யாராவது ஒருவர் பொய்யாகவேனும் இச்சம்பவம் பற்றி ஐ.சி.சி.க்கு முறைப்பாடொன்றைச் செய்யும் பட்சத்தில் அவர்கள் மீதான விசாரணைகள் முடியும் வரை ஆட்டத்தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதன் மூலம் அவர்கள் இருவரதும் கிரிக்கெட் எதிர்காலத்தையே ஆபத்துக்குள் தள்ளிவிடும் கைங்கரியம் இச்சம்பவத்தில் கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
அண்மையில் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச அரங்கில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றின் பின் மைதானம் சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ற தரத்தில் இல்லையென்று மஹேல ஜயவர்த்தன பகிரங்கமாக விமர்சித்திருந்ததே அவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான காரணம் என்றறிய முடிகின்றது.


