
இளைஞர்கள் மனதில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய் தனது தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்காக ரசிகர் மன்றங்களை நடத்தி வந்தார். வழக்கம் போல பிறநடிகர்களுக்கும் இருந்த அதே அரசியல் ஆசை விஜய்-க்கும் துளிர் விட்டது. கடந்த ஆண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவரது வயது இளைஞர் காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு தகுதியானது இல்லை என கூறி ராகுல் மறுத்துவிட்டார்.
இந்த சந்திப்பு தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடத்தில் அதர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. விஜய்-க்கு அப்போதில் இருந்து அரசியல் ரீதியாக பலதொந்தரவுகள் ஆரம்பம் ஆயின. உச்சகட்டமாக அவரது காவலன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு திரையரங்குகள் தயங்கின.
விரைவில் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவை விஜய் தெரிவிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அவரது மனதுக்குள் என்ன இருக்கிறது என புரியாத புதிராகவே இருந்தது.
தமிழக அரசியலின் மிகப்பெரிய சக்தி ஒன்று அவரை தடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது. நாகப்பட்டினத்தில் மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கண்டன கூட்டம் ஒன்றையும் விஜய் நடத்தினார். அவரது மக்கள் இயக்கம் அமைப்பானது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் என கருதப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் சில பிரசாரக்கூட்டங்களில் அவரது இயக்கக்கொடியும் தென்பட்டது.
அவருக்கு அ.தி.மு.க.வில் 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் எதிர்பார்ப்பும் நிலவியது. இந்நிலையில் திருச்சியில் முகாமிட்டுள்ள ஜெயலலிதாவை விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது மகனின் மக்கள் இயக்கம் அமைப்பானது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறினார்.


