பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் பரபரப்பான உலக கோப்பை அரையிறுதி போட்டி வரும் 30ம் தேதி மொகாலியில் நடைபெற உள்ளது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற இரு அணிகளும் உறுதியாக இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே டென்ஷன் தொற்றி கொள்ள போட்டியை பார்க்கும் ரசிகர்கள் தற்போது உலக கோப்பை தொடர் என்பதால் சீட்டின் நுனிக்கு வந்துவிடுவார்கள். இரு அணிகளும் இதுவரை நான்கு முறை உலக கோப்பை தொடரில் விளையாடியுள்ளன. இந்த நான்கிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது இந்திய ரசிகர்களுக்கு குஷியான விஷயம்.
கடைசியாக இரு அணிகளும் மோதிய 2003 உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் 98 ரன்கள் குவித்து அசத்தினார். தற்போதைய உலக கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 2 சதம் உட்பட 379 ரன்கள் எடுத்து சூப்பர் பார்மில் இருப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம்.
சேவாக், காம்பீர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். லீக் போட்டியில் பவர் பிளே ஓவர்களில் சொதப்பி வந்த இந்திய அணி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதியில் செய்த தவறுக்கு பிராய்சித்தம் தேடிக் கொண்டது. ஆல்-ரவுண்டராக யுவராஜ் சிங் விஸ்வரூபம் எடுக்க இந்திய அணி அவுஸ்திரேலியா கண்டத்தை தாண்டியது.
பேட்டிங் இந்தியாவின் பலமாக அமைய, பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. ஜாகீர் கான் தவிர்த்து வேறு யாரும் சொல்லி கொள்ளும்படி செயல்பட வில்லை. இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் திணறி வருவது, கவலை அளிக்கிறது. ஹர்பஜன், முனாப், நெஹ்ரா ஏமாற்றம் அளித்து வருகின்றனர்.
மறுமுனையில் பாகிஸ்தான் பந்துவீச்சில் மிரட்டி வருகிறது. கேப்டன் அப்ரிடி 21 விக்கெட் வீழ்த்தி அசத்தி வருகிறார். உமர் குல், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தர் ஆகியோரும் வேகத்தில் கலக்க காத்திருக்கின்றனர். ஹபீஸ், கம்ரான் அக்மல், மிஸ்பா, அப்ரிடி என பேட்டிங்கும் வலுவாக உள்ளது. இதுவரை இந்தியா உலக கோப்பை தொடரில் வெல்ல முடியாத பாகிஸ்தான் முதல் வெற்றியை ருசிக்க திட்டமிட்டு வருகிறது.
உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 34 போட்டிகளில் வென்று அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த அஸ்திரேலியாவின் வெற்றி நடைக்கு லீக் போட்டியில் வேட்டு வைத்த பாகிஸ்தானும், தொடர்ந்து நான்காவது உலக கோப்பை வெல்ல நினைத்த அவுஸ்திரேலியாவின் ஆணவத்துக்கு ஆப்பு வைத்த இந்தியாவும் மோதுவதால் மொகாலியில் மீண்டும் ஒரு உலக கோப்பை சரவெடிக்கு ரசிகர்கள் தயாராகலாம்.


