மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 13வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொச்சி அணி மும்பை இந்தியன்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பில் அபாரமாக விளையாடிய சச்சின் ஆட்டமிழக்காமல் 66 பந்தில் சதம் பெற்றார்.
183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணி 19 ஆவது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்கள் மெக்கலம், ஜெயவர்த்தன ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் கொச்சி அணி எளிதாக வெற்றி பெற்றது. மெக்கலம் 60 பந்தில் 81 ஓட்டங்களையும், ஜெயவர்த்தன 36 பந்தில் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆட்ட நாயகனாக மெக்கலம் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் கல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


